வெலிசறை கடற்படை மருத்துவமனை வளாகத்தில் சுழியோடி மருத்துவம் குறித்த பட்டறை மற்றும் கண்காட்சி நடைப்பெற்றது
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியினால் (Sri Lanka College of Military Medicine - SLCOMM) ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று (03) நாள் பட்டறை மற்றும் சுழியோடி மருத்துவ கண்காட்சி 2025 ஆகஸ்ட் 06 முதல் 08 வரை வெலிசறை கடற்படை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
2025 மே முதல் 2026 ஜனவரி வரை மேற்கொள்ளப்பட்ட கல்வி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அதன் உறுப்பினர்களான இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை மருத்துவ அதிகாரிகளின் தொழில்முறை மேம்பாட்டிற்காக இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியால் இந்தப் பட்டறை மற்றும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, 2025 ஆகஸ்ட் 06 ஆம் திகதி நடைபெற்ற ஒரு நாள் (01) பட்டறை, இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் தலைவரும், கடற்படை மருத்துவ சேவைகளின் பணிப்பாளர் நாயகமுமான அறுவை சிகிச்சை நிபுணர் ரியர் அட்மிரல் ஜனக மாரபகே அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அங்கு, சுழியோடி வகைகள் (Types of Diving), சுழியோடி நுட்பங்கள் (Diving Techniques), கடல் விலங்குகளை கடிக்கும் மற்றும் தாக்கும் முறைகள்(Biting & Attacking Marine Animals), நீருக்கடியில் இயற்பியல் (Underwater Physics), சுழியோடும் போது ஏற்படும் விபத்துகளுக்கான முதலுதவி (First Aid for Diving Accidents), கடல் பக்டீரியா நோய்க்கிருமிகளால் ஏற்படும் தோல் மற்றும் மென்மையான திசு தொற்றுகள் (Skin & Soft Tissue Infections), மற்றும் சுழியோடும் நடவடிக்கைகளின் போது ஏற்படும் சிக்கல்களைக் கையாள்வதுடன், மறுஅழுத்த அறையைப் பயன்படுத்தி ஹைபர்பரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை (Hyperbaric Oxygen Therapy) மூலம் முகாமை செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்தப் பட்டறையில் முப்படைகள் மற்றும் சிவில் மருத்துவ சேவைகளைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகள் உட்பட முப்பத்திரண்டு (32) மருத்துவர்களும், நீருக்கடியில் சுழியோடி மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒன்பது (09) மருத்துவ உதவியாளர்களும் பங்கேற்றனர், மேலும் பட்டறையை வெற்றிகரமாக முடித்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், சுழியோடி மருத்துவ கண்காட்சியில் ஆபத்தான கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் இந்த உயிரினங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகள், கடலுக்கு அடியில் சுழியோடும் போது ஏற்படக்கூடிய டிகம்பரஷ்ஷன் நோய் மற்றும் அத்தகைய விபத்துக்கள் மற்றும் நோய்களுக்கான சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.