‘Commandant’s Cup Sailing Regatta - 2025’ திருகோணமலை செண்டி பே கடற்கரையில் ஆரம்பமாகிறது

வெளிநாட்டு நட்பு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான தற்போதைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், விளையாட்டு மூலம் கட்டமைக்கப்பட்ட சர்வதேச உறவுகள் மூலம் கடல்சார் திறமையின் சிறப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, இலங்கை கடற்படையின், திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியால் ஐந்தாவது (05) முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘Commandant’s Cup Sailing Regatta - 2025’ பாய்மரப் போட்டி, 2025 ஆகஸ்ட் 20 அன்று திருகோணமலை செண்டி பே கடற்கரையில், பயிற்சி பெறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கடற்படை அதிகாரிகளின் பங்கேற்புடன் ஆரம்பமாகியது.

கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கொமடோர் தினேஷ் பண்டாரவின் அழைப்பின் பேரில், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவின் தலைமையில் இந்தப் போட்டித் தொடக்க விழா நடைபெற்றது.

அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, ஈரான், இத்தாலி, ஓமான், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட எட்டு (08) நாடுகளைச் சேர்ந்த கடற்படை கல்விக்கூடங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பயிற்சி அதிகாரிகள் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியால் ஏற்பாடு செய்யப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

மேலும், இந்த போட்டியை இலங்கை பாய்மர சங்கத்தின் (Yachting Association of Sri Lanka - YASL) மேற்பார்வையின் கீழ் 2025 ஆகஸ்ட் 21 முதல் 23 வரை Enterprise மற்றும் Laser பிரிவுகளின் கீழ் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் இந்த போட்டியை ஏற்பாடு செய்வதன் மூலம், விளையாட்டு மூலம் வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்தவும், தீவில் நீர் விளையாட்டுகளை ஊக்குவிக்கவும், சுற்றுலாவை ஈர்க்கவும் கடற்படை எதிர்பார்கிறது.