கச்சத்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்திர திருவிழா வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கடற்படையின் பங்களிப்பு பாராட்டப்பட்டது
கச்சத்தீவு வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா, பெரும் எண்ணிக்கையிலான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் 2026 பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆகிய இரு தினங்களில் கோலாகலமாக நடைபெற்றது.
பிரதான திருப்பலி யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் வணக்கத்திற்குரிய அருட்தந்தை பி. ஜே. ஜெபரத்தினம் (Very Revd. Fr. P. J. Jebaratnam, Vicar General, Jaffna Diocese) அவர்களினால், இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்டத்தின் வணக்கத்திற்குரிய அருட்தந்தை அருள் ஜோசப் (Rt. Revd. Msgr. Arul Joseph, Vicar General of Sivagangai diocese, India), கொழும்பு பேராயர் மறைமாவட்டத்தின் அருட்தந்தை சம்பத் (Revd. Fr. Sampath, Colombo Arch Diocese), இந்தியாவின் இராமேஸ்வரம் பங்குத்தந்தையான அருட்தந்தை தோமஸ் பரிபாலன் (Revd. Fr. Thomas Paribalan, Parish Priest, Rameswaram, India) மற்றும் நெடுந்தீவு பங்குத்தந்தையான அருட்தந்தை அன்டன் அமலதாஸ் (Revd. Fr. Anton Amaladas, Parish Priest, Delft) ஆகியவர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்டதுடன், வருடாந்த திருப்பலி யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் (Maruthalingam Piiratheepan) அவர்களின் ஏற்பாட்டில் மற்றும் இலங்கை கடற்படையின் முழுமையான வளங்கள், தொழில்நுட்ப மற்றும் சமூக பங்களிப்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது.
அதன் இறுதித் திருப்பலிக்காக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவ தலைவி அனுஷா பானகொட மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் உட்பட கௌரவமான பிரமுகர்கள் கலந்துகொண்டதுடன், இம்முறை திருப்பலிக்காக வருகை தந்திருந்த பதின்மூவாயிரத்து அறுநூறுக்கும் (13600) அதிகமான இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் முன்னிலையில் உரையாற்றிய யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் வணக்கத்திற்குரிய அருட்தந்தை பி. ஜே. ஜெபரத்தினம் அவர்கள், இத்திருப்பலியை வெற்றிகரமாக நடத்திக் கொள்வதற்காக கடற்படையின் தீர்க்கமான பங்களிப்பை அங்கு பாராட்டி, தனது உரையை நிகழ்த்தினார்.
இத்திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்துவதற்காக, பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ், கடற்படைத் தளபதியின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலின் பேரில், வடக்கு கடற்படை கட்டளையின் கட்டளை தளபதியின் வழிநடத்தலின் கீழ் இலங்கை கடற்படையினால் அனைத்து வசதிகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு, யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகத்துடன் ஒருங்கிணைந்து பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளும் ஏற்படுத்தப்பட்டதுடன், உயிர்காப்பு நடவடிக்கைகள், சுகாதாரம் மற்றும் மருத்துவத் வசதிகளும், தகவல் தொடர்பாடல் வசதிகளும் திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டன.
மேலும், இங்கு கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழாவின் முடிவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த கடற்படைத் தளபதி, இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்துகொள்ளும் கலாச்சார ரீதியாக முக்கியமான புனித அந்தோணியாரின் வருடாந்திர திருவிழாவை இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களின் பேரில், இலங்கை கடற்படை, யாழ்ப்பாணம் மறைமாவட்டம், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம், அரச நிறுவனங்கள் மற்றும் பொலிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்ததால் வெற்றிகரமாக நடத்த முடிந்தது என்று தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய தலைமுறைக்கு உரித்தான கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர்களை எதிர்கால தலைமுறைக்கும் அப்படியே வழங்குவது அனைவரின் பொறுப்பாகும் என்றும், ஒவ்வொருவரும் சர்வதேச சட்டங்களுக்கும் அரசுகளின் சட்டங்களுக்கும் மதிப்பளிப்பது மிக முக்கியமானது மற்றும் அத்தியாவசியமானது என்றும் நினைவூட்டிய கடற்படைத் தளபதி, பிராந்திய கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் தொடர்ச்சியான பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு பாராட்டப்பட்டது. மேலும், கடல்சார் சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடல்சார் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்று கூறிய கடற்படைத் தளபதி, இந்த மத நிகழ்வின் துல்லியமான செய்திகளை வழங்க வந்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.


