சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 06 பேர் கடற்படையினரால் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 06 பேர் மன்னார் மணற்பரப்பைச் சூழவுள்ள கடற்பரப்பில் 2022 செப்டெம்பர் 27 ஆம் திகதி காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் நாட்டின் கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன்படி, வடமத்திய கடற்படைக் கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் தம்மன்னாவின் கடற்படையினர் 2022 செப்டம்பர் 27 ஆம் திகதி காலை, தலைமன்னார் மணற்பரப்பைச் சூழவுள்ள கடற்பகுதியில், மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மணல் திட்டொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்ததைக் கண்காணித்த சில நபர்களை ஆய்வு செய்தனர். அங்கு, சட்டவிரோதமாக நாட்டிலிருந்து குடியேறுவதற்காக கப்பல் வரும் வரை மணல் திட்டில் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டு (02) ஆண்களும், ஒரு பெண் (01) மற்றும் 18 வயதுக்குட்பட்ட மூன்று (03) நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் மொறவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பாதுகாப்பற்ற கப்பல்களை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்துள்ள மனித கடத்தலில் சிக்கி உயிரை பணயம் வைத்து சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து சட்டத்தின் முன் தண்டனை பெறுவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.