சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 45 பேர் காலி ஹபராதுவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 45 பேர் காலி ஹபராதுவ கரையோரப் பகுதியில் இன்று (2022 ஒக்டோபர் 23) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அந்த பகுதியில் உள்ள தங்குமிடமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் நாட்டின் கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன்படி, தெற்கு கடற்படைக் கட்டளையுடன் இணைக்கப்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் தக்ஷின நிருவனத்தின் கடற்படையினர் ஹபராதுவ பொலிஸாரின் உதவியுடன் காலி, ஹபராதுவ கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அந்தப் பகுதியிலுள்ள தங்குமிடமொன்று சோதனையிட்டனர். அப்போது அங்கு, சட்டவிரோதமாக வெளிநாட்டிற்குச் செல்வதற்காக கப்பல் வரும் வரை தங்கும் விடுதியில் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற 18 வயதுக்கு மேற்பட்ட முப்பத்தைந்து (35) ஆண்களும், ஏழு (07) பெண்களும், 18 வயதுக்குட்பட்ட மூன்று (03) பேரும் உட்பட 45 பேர் இவ்வாரு கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்தக் குழுவை ஏற்றிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் பேருந்து ஒன்று விடுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் கைதுசெய்யப்பட்டது.

இந்த தேடுதல் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், வென்னப்புவ மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளை வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், இந்த குழுவும் பஸ் வண்டியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹபராதுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்துள்ள மனித கடத்தலில் சிக்கி உயிரை பணயம் வைத்து சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து சட்டத்தின் முன் தண்டனை பெறுவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.