யாழ்ப்பாணத்தில் 85 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம், மண்டத்தீவின் தென் கரையோரப் பகுதியில் இன்று (மே 08, 2023) இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 85 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி கடற்படை பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

அதன்படி, இன்று (மே 08, 2023) காலை யாழ்ப்பாணம், மண்டத்தீவின் தெற்கு கடற்கரையில், வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண நிறுவனத்தின் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்கரை பகுதிக்கு அருகில் உள்ள புதர் செடிகளில் இருந்து 03 மூட்டை கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அந்த சாக்குகளில் சுமார் 85 கிலோ 450 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா அடைக்கப்பட்ட 22 பொதிகள் இருந்துள்ளதுடன் அவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி மதிப்பு 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது, மேலும் குறித்த கேரள கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளது.