சட்டவிரோதமான முறையில் பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை கடல் வழியாக ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி படகொன்று 05 சந்தேக நபர்களுடன் தென்கடலில் கைது

இலங்கை கடற்படையினர் 2024 ஜூலை 7 ஆம் திகதி இலங்கை கடலோரக் காவல்படைக்கு சொந்தமான சுரக்ஷா கப்பல் மூலம் தென் கடலில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பல வகை பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை கொண்டு சென்ற பல நாள் மீன்பிடிப் படகொன்றுடன் 05 சந்தேக நபர்கள் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோரங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பறவைகள் மற்றும் ஊர்வன கடத்தல் மோசடியில் கவனம் செலுத்தி, கடற்படை புலனாய்வுப் பிரிவினரால் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட விரிவான தகவல் பகுப்பாய்வு அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தென் கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான இழுவை படகை பரிசோதித்த போது, பல்வேறு வகையான 13 மலைப்பாம்புகள், 01 உடும்பு, 01 ஆமை மற்றும் 03 கிளிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி, 05 சந்தேக நபர்களுடன் குறித்த மீன்பிடி இழுவை படகு கைப்பற்றப்பட்டது.

கடலோரக் காவல்படை கப்பல் சுரக்ஷா மூலம் கைது செய்யப்பட்ட இந்த விலங்குகளுடன் பல நாள் மீன்பிடிக் படகு 2024 ஜூலை 08 ஆம் திகதி இரவு காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கப்பலில் கொண்டு வரப்பட்ட விலங்குகளை பரிசோதித்து, குறித்த விலங்குகள் இலங்கைக்கு பூர்வீகமற்றவை என அடையாளம் கண்டனர்.

நீர்கொழும்பு பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று விலங்குகளை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இந்த பலநாள் மீன்பிடி படகின் சந்தேகநபர்கள் 34 மற்றும் 67 வயதுடைய நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடி படகு மற்றும் விலங்குகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹிக்கடுவை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த விலங்குகள் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு கொண்டு வருவதற்காக அல்லது வேறு இடத்திற்கு அனுப்புவதற்காக கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் இந்த வகையான கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை கடற்படை முனைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.