கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் வட கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடி படகில் இருந்த மீனவர்களை மீட்க இந்திய கடலோர காவல்படையின் உதவி

இலங்கைக்கு வடக்கின் பருத்தித்துறையில் இருந்து சுமார் 447 கடல் மைல் (சுமார் 827 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் விபத்துக்குள்ளான இலங்கை மீன்பிடி படகொன்றில் இருந்த நான்கு (04) மீனவர்கள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் இந்திய மீன்பிடிப் படகொன்று மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இந்தியாவின் சென்னை, கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு 21 ஆகஸ்ட் 2024 அன்று தகவல் அளித்துள்ளது.

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 2024 ஜூலை 07 ஆம் திகதி நான்கு (04) மீனவர்களுடன் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட 1DAY-A-0184 KMN என்ற பதிவெண் கொண்ட ஒரு நாள் மீன்பிடிப் படகு ஆபத்தில் சிக்கியுள்ளதாகவும், குறித்த படகு மீட்பதற்கு கடற்படையின் உதவி தேவை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் கொழும்பு கடற்படை தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு அறிவித்தது.

அதன்படி, உடனடியாக இந்த அறிவிப்பிற்கு பதிலளித்த கடற்படையினர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், விபத்தில் சிக்கிய மீன்பிடி படகை மீட்பதற்கு உதவி தேவை என்று இந்தியாவின் சென்னை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்படி, Thomas Mery (பதிவு எண். TN 02 MM 1976) என்ற இந்திய மீன்பிடி படகு மூலம் விபத்தில் சிக்கிய இலங்கையின் மீன்பிடி படகில் இருந்த நான்கு (04) மீனவர்களை வெற்றிகரமாக மீட்டு இந்திய கடலோர காவல்படை கப்பலொன்று மூலம் சென்னை மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்படுகின்றதாக கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு 21 ஆகஸ்ட் 2024 அன்று அறிவிக்கப்பட்டது.

மேலும், கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள்ளும், கடல்சார் மற்றும் மீனவ மக்களுக்கும் நிவாரணம் வழங்க கடற்படை தயாராக உள்ளது.