வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கடற்படையின் தொடர்ச்சியான நிவாரணப் பணிகள்

மோசமான காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கல, பதுரலிய, லத்பந்துர மற்றும் வலல்லாவிட்ட பிரதேசங்களுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பிரதேசத்துக்கும் கடற்படை ஐந்து (05) நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளதுடன் இன்று காலை (2023 ஜூன் 06) அந்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் பதுரலிய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைக் கருத்தில் கொண்டு, பதுரலிய கங்காராம விகாரையிலிருந்து சமய நோக்கத்திற்காக சங்கத்தினரை ஏற்றிச் செல்வது மற்றும் சாதாரன தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்களை பாடசாலைகளுக்கு ஏற்றிச் செல்வது, உட்பட புளத்சிங்கள பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட பிரதேச மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடற்படை நிவாரணக் குழுவினர் தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மேலும், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில், மேற்கு கடற்படை கட்டளையின் இருபத்து மூன்று (23) மேலதிக நிவாரண குழுக்களையும், தென் கடற்படை கட்டளையின் பத்து (10) மேலதிக நிவாரண குழுக்களையும் கடற்படை தயார் நிலையில் வைத்துள்ளது.