சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களையும் இந்திய மீன்பிடி படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்
2025 ஜனவரி 27, அன்று, யாழ்ப்பாணத்தின் வெல்வெட்டித்துறைப் பகுதியிலிருந்து இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த ஏராளமான இந்திய மீன்பிடிக் கப்பல்களை வடக்கு கடற்படைக் கட்டளை அவதானித்து, அந்த கட்டளைக்கு சொந்தமான கடற்படையின் கப்பல்களை அனுப்புவதன் மூலம் அந்த மீன்பிடி படகுகளை நாட்டின் கடல் எல்லையில் இருந்து அகற்றும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு குறித்த கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு மீன் வளங்களை சேகரித்துக்கொண்டிருந்த பதின்மூன்று (13) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகொன்றும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
இந்திய மீன்பிடிக் கப்பலை கடற்படையினர் கைது செய்யவிருந்த போது, கடற்படையினரின் சட்ட உத்தரவை மீறியதாலும், மேலும் கலவரமான நடத்தையாலும் கடற்படைக் குழுவொன்று கப்பலில் ஏறியுள்ளது. கப்பலுக்குள் கடற்படையினர் ஏற விடாமல் தடுக்கும் வகையில் இந்திய மீனவர்கள் அதற்கு செவிசாய்க்காமல், வழக்கமான பணிகளுக்கு இடையூறு விளைவித்து, கடும் எதிர்ப்பை காட்டி, மீன்பிடி கப்பலை ஆக்ரோஷமாக கையாண்டதால், இந்திய மீனவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதுடன், கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலில் ஏறும்போது, கடற்படை வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மீனவர்கள் குழு ஆக்ரோஷமாக தாக்க முயன்றது. கடற்படை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முற்பட்ட போது, அந்த துப்பாக்கியின் செயல்பாட்டினால் இரண்டு மீனவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.
கடற்படையினரால் இரு மீனவர்களுக்கும் அடிப்படை முதலுதவிகளை வழங்கியதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என யாழ்ப்பாணம் வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கடற்படையினர் காங்கேசன்துறை பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் எஞ்சிய பதினொரு (11) மீனவர்கள் இன்று (2025 ஜனவரி 28,) காலை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்மயிலடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர், கடற்படையினரால் உள்ளூர் கடற்பரப்பு மற்றும் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், வடமாகாண கடற்பரப்பில் உள்ள கடற் கரையோரப் பாதுகாப்பிற்கும், வடமாகாண மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.