Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

தியவன்னா படகோட்ட மையத்திற்காக நாட்டின் முதலாவது அலையற்ற நடுவர் படகை இலங்கை கடற்படை தயாரித்துள்ளது

22 Sep 2026

உள்நாட்டு கடற்படை பொறியியல் துறையில் மேலும் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கை கடற்படையின் படகு கட்டும் தளத்தினால் (Naval Boat Building Yard – NBBY) துடுப்புப் படகோட்டம் மற்றும் கனோயிங் போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, நாட்டின் முதலாவது உள்நாட்டில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட அலையற்ற நடுவர் படகு (Waveless Referee Boat), 2026 ஏப்ரல் 22 ஆம் திகதி பத்தரமுல்ல தியவன்னா கடற்படை நீர் விளையாட்டு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், தற்போது அப்படகு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

ISO 9001:2015 மற்றும் ISO 45001:2019 தரநிலைகளுக்கு இணங்கவும், கழிவு உமிழ்வு மற்றும் கழிவு அகற்றுதல் தொடர்பான சுற்றுச்சூழல் பாதுகாப்பு சான்றிழழைப் (EPL) பெற்றுள்ள கடற்படை படகு கட்டும் தளத்தினால் இந்த விசேட படகின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டமை, கடற்படை பொறியியல் துறையில் சுயசார்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உள்நாட்டு தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும், இலங்கை கடற்படையின் 2030 கடற்படை மூலோபாயத் திட்டத்திற்கு (NAVSTRAT-2030) அமைவாக மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகும்.

இந்த அலையற்ற நடுவர் படகின் முழுமையான வடிவமைப்பானது, கடற்படை பொறியியல் தரநிலைகளுக்கு இணங்க கடற்படை வடிவமைப்பு பணிப்பகத்தினால் (Directorate of Naval Design) தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், மேற்கொள்ளப்பட்ட செயல்திறன் பரிசோதனைகள் மூலம் படகின் வினைத்திறன் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு விசேட படகை வடிவமைப்பதில் இருந்து கட்டுமானம் மற்றும் செயல்பாட்டு பரிசோதனைகள் வரையிலான முழுமையான செயன்முறையையும் உள்நாட்டிலேயே மேற்கொள்வதற்கான இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப திறனை, இந்தப் படகின் தயாரிப்பு மேலும் உறுதிப்படுத்துகிறது.

துடுப்புப் படகோட்டப் போட்டிகளுக்கு நீர் மிகவும் அமைதியாக இருப்பது அத்தியாவசியமானது என்பதுடன், குறிப்பாக போட்டியாளர்களின் பாதுகாப்பு, போட்டியின் நியாயத்தன்மை மற்றும் துல்லியமான நேரத்தைக் கணித்தல் ஆகியவற்றிற்கு நீர்மேற்பரப்பில் ஏற்படும் சிறிய அலைகள் கூட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தத் தேவைக் கவனத்திற் கொண்டு, போட்டியாளர்கள் பயணிக்கும் படகுகளுக்கு அருகில் இயங்கும்போது நீரில் அலைகள் உருவாகுவதைக் குறைக்கும் வகையில், அதிக ஸ்திரத்தன்மை கொண்ட மற்றும் குறைந்த அலைகளை உருவாக்கும் கெட்டமரன் (Catamaran) வகை படகாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், போட்டி நடுவர்களுக்கு ஒரு ஸ்திரமான மற்றும் நம்பகமான தளத்தை வழங்குவதுடன், போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான அமைதியான நீர்நிலையையும் பேண முடிகிறது.

இந்த புதிய படகிற்கு NC/WL/001 எனும் ஹல் இலக்கம் (Hull Number) வழங்கப்பட்டுள்ள Rடன், இது கெட்டமரன் (Catamaran) படகு வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்படகின் மொத்த நீளம் 5.53 மீற்றராகவும், அகலம் 2.30 மீற்றராகவும் உள்ளது. சராசரி ஆழம் 0.16 மீற்றராகவும், மொத்த எடை 0.45 தொன்னாகவும் உள்ள இப்படகின் பயணிகள் கொள்ளளவு அதிகபட்சமாக இரண்டு நபர்களாகும் என்பதுடன், பெற்றோல் எரிபொருளைப் பயன்படுத்தும் 25 குதிரைத்திறன் கொண்ட வெளிப்புற இயந்திரம் (Outboard Engine) மூலம் இந்தப் படகு இயங்குகிறது.

மேலும், பாரம்பரிய கடற்படை நடவடிக்கைகளுக்கு அப்பால் சென்று, தேசிய விளையாட்டுத் துறைக்கும் கடற்படை பொறியியல் திறன்களைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தும் இந்தத் திட்டமானது, உள்நாட்டு பொறியியல் கண்டுபிடிப்புகள் மற்றும் சுயசார்பை மேலும் மேம்படுத்துவதற்கான இலங்கை கடற்படையின் முயற்சியில் மற்றொரு முக்கிய அடியைக் குறிக்கிறது.

Accessibility Tools