காணாமல்போன கடற்படை அதிகாரியைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுப்பு
அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இலங்கை கடற்படைக்குச் சொந்தமான அதிவேகத் தாக்குதல் படகில் பயணித்து காணாமல்போன கடற்படை அதிகாரியைத் தேடும் நடவடிக்கை இன்றைய தினமும் (2026 ஆகஸ்ட் 18) 4ஆவது நாளாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை கடற்படைக்குச் சொந்தமான P 4447 அதிவேகத் தாக்குதல் படகு 2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலை 1140 மணியளவில் அங்குலான கடற்பரப்பில் ரோந்துப் பணியை நிறைவுசெய்து திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்தத் திடீர் விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தினையடுத்து, படகிலிருந்த 11 கடற்படையினர் அங்குலான பொலிஸார் மற்றும் பிரதேச மீனவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டதுடன், காணாமல்போன கடற்படை அதிகாரியைக் கண்டுபிடிப்பதற்காகக் கடற்படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காணாமல்போன அதிகாரியைக் கண்டுபிடித்தல், விபத்துக்குள்ளான படகை மீட்டெடுத்தல் மற்றும் விபத்துக்கான காரணத்தைக் துல்லியமாக அடையாளம் காணுதல் என்பவற்றுக்காக இலங்கை விமானப்படையுடன் ஒருங்கிணைந்து தேவையான தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களைக் கடற்படை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
2026 ஆகஸ்ட் 16 ஆம் திகதி காலையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையின் பின்னர், கடற்படை மூழ்காளர்களால் விபத்துக்குள்ளான படகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது. இருப்பினும், கடந்த சில நாட்களாக நிலவிய கொந்தளிப்பான கடல் நிலைமை காரணமாக, படகைப் பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் செல்லும் பணிகளுக்குத் தடங்கல் ஏற்பட்டுள்ளதுடன், அப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மீட்கப்பட்ட கடற்படையினரிடமிருந்து பெறப்பட்ட முதற்கட்டத் தகவல்களின்படி, குறித்த படகு அப்பகுதியில் கடலில் மூழ்கியுள்ள மற்றொரு படகின் பகுதியுடனோ அல்லது வேறு ஏதேனும் பொருளுடனோ மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையை மேற்கொள்வதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான துல்லியமான காரணங்களைக் கண்டறிவதற்காக உரிய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மீட்கப்பட்ட 11 கடற்படையினரும் தற்போது வெலிசரையில் உள்ள கடற்படைத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதுடன், அவர்களின் சுகாதார நிலைமை திருப்திகரமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.