Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

கடற்படை தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்

23 Sep 2026

வடக்கு கடற்படை கட்டளைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்திற்காக 2026 செப்டம்பர் 21 வருகை தந்த கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, அக்கட்டளையின் செயல்பாட்டு, நிர்வாக, அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களைப் பார்வையிட்டதுடன், கடற்படையின் செயல்பாட்டு நோக்கம் குறித்து அக்கட்டளையின் அதிகாரிகள் மற்றும் கடற்படையினருக்கு தெளிவுபடுத்தினார்.

அதன்படி, இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வடக்கு கடற்படை கட்டளைக்கு வருகை தந்த கடற்படை தளபதியை, வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன வரவேற்றதைத் தொடர்ந்து, அக்கட்டளையின் பாதுகாப்பு நிலைமை, செயல்பாட்டு தயார்நிலை, நிர்வாக, அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்கள் குறித்து கடற்படை தளபதிக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு கட்டளை தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, தேசிய பாதுகாப்பிற்கான கடற்படையின் பங்கு பற்றிய தனது தொலைநோக்கு மற்றும் முன்னுரிமைகளை மீண்டும் வலியுறுத்திய கடற்படை தளபதி, அதற்காக மூலோபாய சூழல் பற்றிய புரிதலின் அடிப்படையிலான செயல்பாட்டு தயார்நிலை, செயல்பாட்டு திறன்கள் மற்றும் கொள்ளளவுகளை மேம்படுத்துதல், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தானியங்கி மயமாக்கலைப் பயன்படுத்துதல், திறமையான நிர்வாகம் மற்றும் காலத்திற்கு ஏற்ற தீர்மானங்களை எடுத்தல், அதேபோல் கடற்படை உறுப்பினர்களின் மட்டுமன்றி அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்புரியையும் உறுதி செய்தல் ஆகிய விடயங்களை வலியுறுத்தினார். உள்நாட்டு மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், தீவு சார்ந்த சமூகம் மற்றும் அரச நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக, சிவில் நிறுவனங்களுக்கும் கடற்படைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியத்தையும் கடற்படை தளபதி இதன்போது விசேடமாக வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, கட்டளை செயல்பாட்டு அறையின் பங்களிப்பைப் பார்வையிட்ட கடற்படை தளபதி, வடக்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான கப்பல்கள் மற்றும் படகுகளுக்கான பார்வைக் கடமைச் சுற்றை மேற்கொண்டதுடன், வடக்குக் கடலில் சட்டப்பூர்வப் பயன்பாட்டை ஊக்குவிப்பதில், மிதக்கும் பிரிவுகளின் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் திறனைத் தொடர்ச்சியாகப்பேணி வருவதன் அவசியத்தையும் விசேடமாக வலியுறுத்தினார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, அதிகாரிகளின் நலன்புரி நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வகையில் இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருமணமான அதிகாரிகளுக்கான புதிய வீடமைப்புத் தொகுதியைத் திறந்து வைத்த கடற்படை தளபதி, அதிகாரிகள், சிரேஷ்ட கடற்படையினர் மற்றும் பெண் கடற்படையினரின் தங்குமிட வசதிகளையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, வடக்கு கடற்படை கட்டளையினுள் கடற்படை வீரர்களின் நலன்புரிக்காக நிறுவப்பட்டுள்ள வசதிகள், முன்மொழியப்பட்ட கடற்படை நிறுவனம், சேவா வனிதா நலன்புரி விற்பனை நிலையம், பொது உணவகம் மற்றும் கட்டளை மோட்டார் வாகன பொறியியல் பழுதுபார்க்கும் பட்டறை என்பவற்றுக்கான கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்திற்கு இணையாக காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பருத்தித்துறை கடற்படைப் பிரிவிற்கான கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட கடற்படை தளபதி, வடக்கு கடற்படை கட்டளையினால் மேற்கொள்ளப்படும் செயல்பாட்டு நடவடிக்கைகளை மேலும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுப்பதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

Accessibility Tools