புதிய கடற்படைத் தளபதி அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, ஸ்ரீ தளதா மாளிகைக்குச் சென்று வழிபாடு செய்து ஆசி பெற்றார்
இலங்கை கடற்படையின் 27 வது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்ற பின்னர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று (2026 ஜூலை 10) கண்டியில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா விஹாரை ஆகிய இரு தரப்பினதும் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றதுடன், மேலும் கண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தளதா மாளிகைக்குச் சென்று, ஸ்ரீ தளதா பெருமானை வழிபட்டு, கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைவதற்காக ஆசி பெற்றார். இந்நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவ தலைவி திருமதி கௌசல்யா ஓபாத பெர்னாண்டோ அவர்களும் கலந்துகொண்டார்.
இதன்போது, முதன்முதலில் மல்வத்து மகா விஹாரைக்குச் சென்ற கடற்படைத் தளபதி, மல்வத்து மகா விஹாரை தரப்பின் அதிவணக்கத்திற்குரிய திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கலாபிதான மகாநாயக்க மாஹிமிபானன் அவர்களைச் சந்தித்து, வணங்கி, பிரிகர வழங்கி, அவர்களின் ஆசிகளைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார அவர்களின் வரவேற்புடன் கண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தளதா மாளிகைக்குச் சென்ற கடற்படைத் தளபதி, ஸ்ரீ தளதா பெருமானை வழிபட்டு, கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைவதற்காக ஆசி பெற்றார்.
பின்னர், அஸ்கிரிய மகா விஹாரைக்கு வருகை தந்த கடற்படைத் தளபதி, அஸ்கிரிய தரப்பின் ராஜகீய பண்டித, மகோபாத்தியாய, அதிவணக்கத்திற்குரிய வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பஞ்ஞாநந்த ஞானரதனாபிதான மகாநாயக்க மாஹிமிபானன் அவர்களைச் சந்தித்து, வணங்கி, பிரிகர வழங்கி கௌரவித்தார். இதன்போது, கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைவதற்காக அவர்கள் அறிவுரைகளை வழங்கி ஆசி வழங்கினார்கள்.
இந்த நிகழ்விற்காக கடற்படைச் செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதியின் செயலாளர் கொமதோரு குமார முணசிங்க இலங்கை கடற்படை கப்பல் கட்டும் நிறுவனத்தின் கட்டளை அதிகாரியான கெப்டன் ஹேமந்த ரணசிங்க உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் குழுவும் பங்கேற்றது.