சட்டவிரோத விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மருந்து மாத்திரைகள் மற்றும் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்
இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து கற்பிட்டி, ஜனசவிபுர பிரதேசத்தில் 2026 ஜூலை 19 ஆம் திகதி மேற்கொண்ட விசேட கூட்டுச் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மருந்து மாத்திரைகள் மற்றும் பீடி இலைத் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதற்கமைய, வடமேல் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனம், கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து கற்பிட்டி, ஜனசவிபுர பிரதேசத்தில் மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனையிடப்பட்டது. இதன்போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த அறுபத்தேழாயிரத்து அறுநூற்று நாற்பது (67,640) மருந்து மாத்திரைகள் மற்றும் சுமார் முப்பது (30) கிலோகிராம் பீடி இலைத் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவர் (01) சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கப்பட்டார்.
மேலும், இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர், மருந்து மாத்திரைகள் மற்றும் பீடி இலைத் தொகுதி என்பன கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.