தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் துறையின் முன்னேற்றத்திற்கு இலங்கை கடற்படையின் பங்களிப்பு பாராட்டப்பட்டது
இலங்கையின் மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவப் பிரதமரின் தலைமையில், தேசிய தொழில்சார் தகுதிச் (National Vocational Qualification – NVQ) சான்றிதழ்கள் ஒரு மில்லியனை வழங்கியமைக்காக மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Celebrating the milestone of awarding of One Million NVQ Certificates” விழா, 2026 ஆகஸ்ட் 12 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, தொழிற்கல்வி மற்றும் பயிற்சித்துறையிற்காக இலங்கை கடற்படை வழங்கிய முன்னோடிப் பங்களிப்பும் பாராட்டப்பட்டது.
இதற்கமைய, இலங்கை கடற்படையானது தனது அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்களின் தொழில்சார் மற்றும் தொழில்நுட்ப அறிவையும் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில், NVQ முறையின் கீழ் பயிற்சி மற்றும் மதிப்பீட்டுத் திட்டங்களைச் செயற்படுத்தி, அவர்களின் தொழில்சார் தேர்ச்சிகளுக்குத் தேசிய அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், கடற்படையில் உள்ள பல்வேறு தொழில்சார் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் சார்ந்த பயிற்சித் திட்டங்களை முறைப்படுத்துவதற்கும் கடற்படை வீரர்களின் தொழில்சார் தேர்ச்சிகளை உயர்த்துவதற்கும் NVQ முறையை ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தி, கடற்படையின் மனித வளத்தை மேலும் திறமையான, தொழில்சார்ந்த மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வலுவூட்டுவதற்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது.
மேலும், இலங்கையின் தொழிற்கல்வி மற்றும் பயிற்சித்துறையின் முன்னேற்றத்திற்காகத் தேசிய தொழில்சார் தகுதி (NVQ) முறையை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு கடற்படை மற்றும் சமுத்திரவியல் பீடம் வழங்கிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டும் வகையில், கடற்படை மற்றும் சமுத்திரவியல் பீடத்தின் தளபதி கமொடோர் தினேஷ் பண்டாரவிடம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் இங்கு இடம்பெற்றது.