கிழக்கு பிராந்திய சிரேஷ்ட முப்படை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் உரையாற்றினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), புதன்கிழமை (03 ஜூன்) கிழக்கு பிராந்தியத்தில் பணியாற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஆற்றிய உரையில், தேசிய பாதுகாப்பு என்பது வலுவான பொருளாதாரத்தாலும் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியை பிரதிபலிக்கும் நிறுவனங்களாலும் வலுப்பெறுகிறது எனத் தெரிவித்தார்.
தனது உரையின் ஆரம்பத்தில், ஜனாதிபதியின் சார்பில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் அனைத்து நிலை உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்த அவர், குறிப்பாக இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தேசிய நெருக்கடிகளின் போது பொதுமக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க அவர்கள் வெளிப்படுத்திய சுயநலமற்ற அர்ப்பணிப்பையும் உடனடி சேவையையும் பாராட்டினார்.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சவால்களை நினைவு கூர்ந்த அவர், தேசிய பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்கள் வெளியிலிருந்து அல்லாது உள்நாட்டிலிருந்தே உருவாகின்றன என்றும், குறிப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள், அரச ஊழல் மற்றும் ஒழுக்க விழுமியங்களின் சீரழிவே அதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டார். பொருளாதார ஒழுக்கமே நிலையான தேசிய பாதுகாப்பிற்கான பாதை என வலியுறுத்திய அவர், அதனை அடைவதற்காக தற்போதைய அரசு கடுமையான நிதி ஒழுக்கத்தை அமுல்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சமூக ஒழுங்கின் சீரழிவு தற்போதைய சமூகத்தில் தீவிரமான பிரச்சினையாக இருப்பதுடன், அது இராணுவப் பணியாளர்களையும் நேரடியாகப் பாதிக்கின்றது எனக் குறிப்பிட்டார். இன, மத அடிப்படையிலான அனைத்து பிரிவினைகளையும் நிராகரித்து, சமூக நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அரச சொத்துக்களை நிர்வகிப்பதிலும் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதிலும் தொழில்முறைத் திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொது சேவைப் பண்புகளை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும், ஒழுக்கத்தையும் ஆயுதப் படைகளின் கௌரவத்தையும் பேணுவதற்காக முப்படைகளின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அவற்றை மீறுபவர்களுக்கு எவ்வித இரக்கமும் காட்டப்படமாட்டாது என்றும் எச்சரித்தார்.
இந்த இலக்குகளை அடைவதற்காக ஏற்கனவே பல முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவற்றில், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் அதிகளவு பங்கேற்பு, ஓய்வுபெற்ற மற்றும் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்களை தொழில்முனைவோராக மாற்றும் நோக்கில் “Warriorpreneurship” திட்டம், மேலும் ஓய்வுபெற்ற மற்றும் ஓய்வுபெறவுள்ள கடற்படை பணியாளர்களுக்கு வணிகக் கடற்படைத் தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றுத்தர சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும் எனவும் குறிப்பிட்டார்.
இவ்விஜயத்தின் போது வெவ்வேறு நிகழ்வுகளில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் திருகோணமலையில் அமைந்துள்ள 22 ஆவது காலாட்படைப் பிரிவு, கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் சீனக்குடா இலங்கை விமானப்படை அகாடமி ஆகியவற்றிற்கும் விஜயம் செய்தார். அங்கு வழங்கப்பட்ட விரிவான விளக்கங்களுக்குப் பின்னர் அதிகாரிகளிடம் நேரடியாக உரையாற்றியதுடன், சிரேஷ்ட ஆணையமற்ற அதிகாரிகள், ரெஜிமென்டல் சார்ஜன்ட் மேஜர்கள் மற்றும் சிவில் பணியாளர்களுடனும் கலந்துரையாடி அவர்களின் கருத்துகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார்.
22 ஆவது காலாட்படைப் பிரிவில் நடைபெற்ற நிகழ்வில் விமானப்படைத் தளபதி, பாதுகாப்புப் படைத் தளபதி (கிழக்கு), 22 மற்றும் 23 ஆவது காலாட்படைப் பிரிவுகளின் பொது கட்டளை அதிகாரிகள், கிழக்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி, சீனக்குடா விமானப்படை அகாடமியின் கட்டளை அதிகாரி மற்றும் கிழக்கு பிராந்தியத்தின் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
ஊடக ஆதரவு - www.defence.lk