இலங்கை தன்னார்வக் கடற்படையின் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பயிற்சி முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை தன்னார்வக் கடற்படையின் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பயிற்சி முகாமின் நிறைவைக் குறிக்கும் வகையில், பிரிவுகளின் ஆய்வு மற்றும் அணிவகுப்பு இன்று (2026 செப்டம்பர் 17) வெலிசரவில் அமைந்துள்ள இலங்கை தன்னார்வக் கடற்படைத் தலைமையகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. தன்னார்வக் கடற்படையின் கட்டளைத் தளபதி கொமடோர் அருண விஜேவர்தன மற்றும் தன்னார்வக் கடற்படையின் கட்டளை அதிகாரி கெப்டன் அனுர கருணாரத்ன ஆகியோரின் அழைப்பின் பேரில், வருடாந்தப் பயிற்சி முகாமின் பிரிவுகளின் ஆய்வு மற்றும் மரியாதையை ஏற்றுக்கொள்வதற்கான பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ கலந்து கொண்டார்.
நீண்ட வரலாற்றையும் பெருமைமிக்க பாரம்பரியத்தையும் கொண்ட இலங்கை தன்னார்வக் கடற்படையின் தனித்துவமான பாரம்பரிய அம்சமாகவும், சட்டரீதியான தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலும், தன்னார்வக் கடற்படை வீரர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும் வருடாந்தப் பயிற்சி முகாம் மற்றும் பிரிவுகளின் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது. 2026 ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இம்முறை வருடாந்தப் பயிற்சி முகாமில், 44 அதிகாரிகள் மற்றும் 445 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படையினரை உள்ளடக்கிய 489 தன்னார்வக் கடற்படையினர் பங்கேற்றனர். இன்று (2026 செப்டம்பர் 17) பாரம்பரிய முறைப்படி கடற்படைத் தளபதியினால் பிரிவுகளின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதையடுத்து நடைபெற்ற மரியாதை அணிவகுப்பு மற்றும் கண்கவர் கலாசார நிகழ்ச்சியைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பயிற்சி முகாம் இவ்வாறு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இதன்போது கருத்துத் தெரிவித்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இலங்கை கடற்படையின் காலத்திற்கேற்ற தேவைகளுக்கு ஏற்ப தன்னார்வக் கடற்படை வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இலங்கை கடற்படையின் விரிவான பணிப்பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு தன்னார்வக் கடற்படையினால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வரும் அமைதியான பங்களிப்பிற்காகத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். மேலும், தன்னார்வக் கடற்படையினால் வழங்கப்பட்டு வரும் இத்தகைய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் 2023 ஆம் ஆண்டில் ஜனாதிபதி வர்ணங்கள் வழங்கப்பட்டமை, தன்னார்வக் கடற்படையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகவும், இலங்கை கடற்படைக்கு பெரும் பெருமையை ஏற்படுத்திய ஒரு சந்தர்ப்பமாகவும் அமைந்ததாக அவர் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த கடற்படைத் தளபதி, “திறன்கள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்சார் திறன்களைக் கொண்ட மனிதவளத்துடன் இலங்கை கடற்படையை மேம்படுத்தும் மூலோபாயத் திட்டம் – 2030” இனை நடைமுறைப்படுத்துவதிலும், இலஞ்சம் மற்றும் ஊழலற்ற, நேர்மையும் ஒழுக்கமும் கொண்ட பணிச்சூழலை கடற்படைக்குள் நிறுவுவதிலும், தன்னார்வக் கடற்படையினரின் அர்ப்பணிப்பையும் இலங்கை கடற்படை சம அளவில் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். மேலும், வருடாந்தப் பயிற்சி முகாம்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் அறிவைத் தொடர்ச்சியாகப் புதுப்பித்துக் கொண்டு, கடற்படையின் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக திறமையாகவும் பயனுள்ள வகையிலும் பங்களிப்பது அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும் என அவர் வலியுறுத்தினார்.
தன்னார்வக் கடற்படையுடன் இணைக்கப்பட்டுள்ள கடற்படை மருத்துவ மற்றும் பல் மருத்துவ சேவைகளில் பணியாற்றும் நிபுணத்துவ மருத்துவர்களின் பாராட்டத்தக்க பங்களிப்பையும், கடற்படை விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வரும் தன்னார்வக் கடற்படையுடன் இணைக்கப்பட்டுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பங்களிப்பையும் கடற்படைத் தளபதி இதன்போது பாராட்டினார். மேலும், தாய்நாட்டின் ஒற்றுமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்து பணியாற்றிய, காணாமல் போன மற்றும் போர்க்காயங்களுக்கு உள்ளான அனைத்து தன்னார்வக் கடற்படைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் இதன்போது தனது மரியாதையைச் செலுத்தினார்.
கடற்படையின் பிரதம அதிகாரி ரவீந்திர திசேரா உள்ளிட்ட கடற்படை முகாமைத்துவ சபையின் சிரேஷ்ட அதிகாரிகள், மேற்கு கடற்படைக் கட்டளை தளபதி உள்ளிட்ட கட்டளை தளபதிகள், கொடி அதிகாரிகள், கடற்படைத் தலைமையகத்திற்கும் மேற்கு கடற்படைப் கட்டளைகும் இணைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அதிகாரிகள், தன்னார்வக் கடற்படையின் முன்னாள் கட்டளை அதிகாரிகள் உள்ளிட்ட கடற்படை வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.